புதுச்சேரி

புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரி நிதி மோசடி: மாயமான ரூ.8.5 கோடியில் ரூ.1.55 கோடியை மீட்ட சைபர் கிரைம் போலீஸ்!

புதுச்சேரி, நவம்பர் 06: புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய நிதியான ரூ.8.5 கோடி சைபர் மோசடி மூலம் மாயமான வழக்கில், துரிதமாகச் செயல்பட்ட சைபர் கிரைம் போலீசார் முதற்கட்டமாக ரூ.1.55 கோடியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் இயங்கி வரும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் வழங்குவதற்காக கல்லூரி நிர்வாகத்தின் வங்கிக் கணக்கில் ரூ.8.5 கோடி இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அண்மையில் மர்ம நபர்கள் அந்த வங்கிக் கணக்கை இணையவழியாக ஊடுருவி, கணக்கிலிருந்த ஒட்டுமொத்த ரூ.8.5 கோடி தொகையையும் முறைகேடாகப் பிற வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்து சுருட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். மோசடி செய்யப்பட்ட பணம் பல்வேறு வங்கி கணக்குகளுக்குத் துரிதமாக மாற்றப்பட்டதை டிராக் செய்த சைபர் கிரைம் போலீசார், உடனடியாக மத்திய அரசின் தேசிய சைபர் கிரைம் போர்ட்டல் (NCRP) உதவியுடன் வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் துரித நடவடிக்கையின் பலனாக, பல்வேறு கணக்குகளுக்குச் சென்ற ரூ.1 கோடியே 55 லட்சம் பணம் உடனடியாக மீட்கப்பட்டு முடக்கப்பட்டது.

மேலும், இந்த இணையவழி பண மோசடி கும்பல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருவது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் தனிப்படையினர் கொல்கத்தாவிற்கு விரைந்து சென்று முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மீதமுள்ள பணத்தை முழுமையாக மீட்கவும், மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவும் தீவிர நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன