புதுச்சேரி

ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் தரமான அரிசி வழங்குக: புதுச்சேரி அரசுக்கு திமுக அமைப்பாளர் இரா. சிவா வலியுறுத்தல்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வெளிச்சந்தையில் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் சொற்ப தொகையைச் செலுத்துவதைத் தவிர்த்து, நியாயவிலைக் கடைகள் மூலமாக தரமான இலவச அரிசியை நேரடியாக வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில திமுக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு, நிலுவையில் இருந்த 6 மாதங்களுக்கான இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வரவு வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசி அடிப்படையில் ரூ. 43-க்கு ஒரு கிலோ அரிசி என்ற கணக்கில் பணம் வழங்கப்படுகிறது. ஆனால், தற்போதைய வெளிச்சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ. 80 முதல் ரூ. 100 வரை விற்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள சூழலில், அரசு வழங்கும் மிகக் குறைந்த தொகை ஒரு வாரத் தேவைக்குக் கூடப் போதுமானதாக இல்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது கிராமங்கள்தோறும் நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த முதலமைச்சர் ரங்கசாமி, தற்போது அதை நிறுத்திருப்பது மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் முறையைக் கைவிட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி வழங்கினால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ரேஷன் கடை ஊழியர்களும் பயன்பெறுவார்கள் என்றும், நிர்வாகக் காரணங்களால் தாமதமானால் நடப்பு விலைவாசிக்கு ஏற்ப கூடுதல் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 700 மதிப்புள்ள சூரியகாந்தி எண்ணெய், சர்க்கரை, பருப்பு, ரவை, மைதா உள்ளிட்ட தீபாவளி தொகுப்பு கதிர்காமம், தட்டாஞ்சாவடி, இந்திரா நகர் ஆகிய தொகுதிகளில் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், பண்டிகைக்கு இன்னும் ஒரு தினமே உள்ள நிலையில் ஏனைய தொகுதிகளுக்கு இதுவரை விநியோகம் செய்யப்படாதது நிர்வாகக் குளறுபடியைக் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, காலம் தாழ்த்தாமல் தீபாவளி தொகுப்பு அனைத்து குடும்பங்களுக்கும் உடனே சென்றடைய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன