புதுச்சேரி

புதுச்சேரி நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை: 20 முக்கிய எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

புதுச்சேரி, அக். 31:
புதுச்சேரி நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளைத் தவிர்க்கவும் தடை செய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், நகரின் 20 முக்கிய இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி நகருக்குள் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நுழைவதற்கும் இயங்குவதற்கும் ஏற்கனவே போக்குவரத்துத் துறையால் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விதிமுறைகளை மீறி சில கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்ட நேரங்களில் நகருக்குள் அத்துமீறி நுழைந்து வந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் நேர்ந்து வந்தன.

இதனையடுத்து, போக்குவரத்து சீனியர் எஸ்.பி. திவ்யா உத்தரவின் பேரில், கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைய வாய்ப்புள்ள 20 முக்கிய எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி நகருக்குள் நுழையும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 அடி சாலை மேம்பாலம் உள்ளிட்ட நகரின் முக்கிய சந்திப்புகளில் எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் போலீசார் தொடர்ந்து முகாமிட்டு தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன