புதுச்சேரி ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி: மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி ஆணை வழங்கினார்
புதுச்சேரி, அக். 31: புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் ஏழைப் பெண்களின் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதியுதவி ஆணைகளை முதலமைச்சர் என். ரங்கசாமி வழங்கினார்.
இது தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திருமண நிதியுதவி திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 297 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் புதிய நடைமுறையின்படி 222 பயனாளிகளுக்கு தலா ரூ.35,000 வீதமும், ஏற்கனவே விண்ணப்பித்திருந்த பழைய விண்ணப்பதாரர்களில் 75 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதமும் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மங்கலம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 26 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி பெறுவதற்கான ஆணைகளை முதல்வர் ரங்கசாமி நேரில் வழங்கினார்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள அனைத்து பயனாளிகளுக்குமான நிதியுதவித் தொகை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக டிபிடி (DBT) முறையில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.