புதுச்சேரியில் வீட்டின் மதில் சுவர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து: கர்ப்பிணி பெண் படுகாயம்!
புதுச்சேரி, 29/10/2023:
புதுச்சேரி அடுத்த மடுகரையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து அபிஷேகப்பாக்கம் பகுதி அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் மதில் சுவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகனா என்ற கர்ப்பிணி பெண் பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து உடனடியாக போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார், விபத்தில் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பேருந்துகள் மக்கள் நெருக்கம் மிகுந்த கிராமப் பகுதிகளில் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், ஓட்டுநர்களின் அஜாக்கிரதையால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.