காமராஜ் நகரில் சேதமடைந்த சிறுபாலம்: மக்கள் கோரிக்கையை ஏற்று சொந்த செலவில் சீரமைக்க உத்தரவிட்ட எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின்!
புதுச்சேரி:
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட வசந்த நகர், சிந்து தெரு பகுதியில் உடைந்து ஆபத்தான நிலையில் இருந்த சிறுபாலத்தின் கைப்பிடி சுவரை, தொகுதி எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் தனது சொந்த செலவில் சீரமைக்கும் பணியைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளார். மக்கள் கோரிக்கைக்கு உடனடியாக செவிசாய்த்து நடவடிக்கை எடுத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் குறித்து தொடர் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வசந்த நகர் சிந்து தெரு பகுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள சிறுபாலத்தின் பக்கவாட்டு கைப்பிடி சுவர் உடைந்து சேதமடைந்து இருப்பதாக பொதுமக்கள் அவரிடம் தெரிவித்தனர்.
அந்தப் பாலத்தைக் கடந்து நாள்தோறும் முதியவர்கள், பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் சிறுவர்கள் அதிகளவில் சென்று வரும் சூழலில், கைப்பிடி சுவர் இல்லாததால் விபத்துக்கள் நேரிடும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். இப்புகாரினை கனிவுடன் கேட்டறிந்த எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின், அரசு நிதி ஒதுக்கீட்டுக்கான காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கில், மக்களின் பாதுகாப்பைக் கருதி தனது சொந்த செலவிலேயே பாலத்தின் கைப்பிடி சுவரை உடனடியாக சீரமைத்துத் தர உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் புதிய கைப்பிடி அமைக்கும் சீரமைப்புப் பணிகள் இன்று முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு முழுப் பாதுகாப்புடன் அர்ப்பணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணி தொடக்க நிகழ்வின் போது, லட்சிய ஜனநாயக கட்சியின் நிர்வாக பொதுச்செயலாளர் ராம்குமார், பொதுச்செயலாளர் பிரபாகரன், இளைஞர் அணி துணைத்தலைவர் ஜாகீர் உசேன், ஊடக ஒருங்கிணைப்பாளர் பரணிசந்திரன் மற்றும் வார்டு பூத் தலைவர்கள், தொகுதி முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.