தட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் மின்தடை: சொந்த செலவில் 40 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கிய எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த்!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட சுப்பையா நகரில் புதைவட மின்பாதையில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக மின்சாரம் இன்றி தவித்த 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் தனது சொந்த செலவில் உடனடி மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்து பொதுமக்களின் துயர் துடைத்துள்ளார்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள சுப்பையா நகர் பகுதியில் பூமிக்கடியில் செல்லும் புதைவட மின்சாரப் பாதையில் எதிர்பாராதவிதமாக பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்தடை ஏற்பட்டு மின் விநியோகம் முற்றிலுமாக முடங்கியது. மின்கோளாறை கண்டறிந்து பழுது நீக்கும் பணிகளில் மின்சாரத் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்ட போதிலும், புதைவட கம்பிகளை முழுமையாக சீரமைத்து வழக்கமான மின் விநியோகத்தை வழங்குவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் சூழல் உருவானது.
மின்சாரம் இல்லாத காரணத்தினால் அப்பகுதி பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதை அறிந்த தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் உடனடியாக களத்தில் இறங்கினார். மின்துறை பழுதுபார்ப்பு பணிகள் முடிவடையும் வரை மக்கள் இருளில் தவிக்கக்கூடாது என்ற நோக்கில், பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் தனது சொந்த செலவிலேயே தற்காலிக மாற்று மின் இணைப்புகளை உடனடியாக அமைத்துக் கொடுத்தார்.
மக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் சொந்த நிதியில் உடனடித் தீர்வு கண்ட சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்திற்கு சுப்பையா நகர் பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். ஏற்கனவே, தட்டாஞ்சாவடி தொகுதியில் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக புதிய அரசு கால்பந்து மைதானம் அமைத்துத் தரப்படும் என்று உறுதியளித்திருந்த எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், தற்போது மக்களின் அவசரத் துயர் துடைக்க உடனடியாக களம் கண்டிருப்பது தொகுதி மக்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.