புதுச்சேரியில் புதிய எல்டிசி அரசுப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்
புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரியில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எல்டிசி அரசுப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, அரசுத் துறைகளில் காலியாக இருந்த சுமார் 5,000 பணியிடங்கள் கடந்த 2022 முதல் 2026 ஆகஸ்ட் மாதம் வரையிலான நான்கு ஆண்டுகளில் நிரப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எல்டிசி, யுடிசி, ஆசிரியர்கள், துணை தாசில்தார்கள், நர்சிங் அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த நிலையில், சுகாதாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட சேவைத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த நியமனங்கள் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நிர்வாத்தின் பலம்தான் வளர்ச்சியின் முதுகெலும்பு என்று குறிப்பிட்ட அவர், பணியில் இணையும் இளைஞர்கள் அரசுப் பணியை மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பாகக் கருதி நேர்மையோடும் வெளிப்படைத்தன்மையோடும் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.