தமிழ்நாடு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தியாகத்தையும் பெருமையையும் போற்றுவோம்: அன்புமணி ராமதாஸ் புகழாரம்!

சென்னை: விடுதலைப் போராட்ட வீரரும் சமூக விடுதலைப் போராளியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது பிறந்தநாளும், 64-ஆவது குருபூஜையும் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது மகத்தான தியாகத்தையும் பொதுவாழ்வுப் பணிகளையும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என பிரகடனம் செய்து அதன்படி தூய வாழ்வு வாழ்ந்தவர் தேவர் பெருமகனார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும், தமிழ்நாட்டு அரசியல் களத்தையும் தேவர் திருமகனாரை தவிர்த்துவிட்டு முழுமையாக எழுதிவிட முடியாது. காங்கிரஸ் இயக்கத்தில் இயங்கியபோதிலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை தமது வழிகாட்டும் தலைவராக ஏற்றுக்கொண்டவர். நேதாஜிக்கு ஆதரவாக தென்னிந்தியா முழுவதும் தீவிர ஆதரவு திரட்டி அவரை வெற்றிபெறச் செய்த பெருமை பசும்பொன் தேவருக்கு உண்டு. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு (INA) தமிழகத்திலிருந்து மாபெரும் படையைத் திரட்டி அனுப்பிய வரலாற்றுப் பெருமையும் அவருக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக தேவர் ஆற்றிய களப்பணிகளை நினைவுகூர்ந்த அன்புமணி ராமதாஸ், “பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே பிறப்பின் அடிப்படையில் குற்றவாளிகளாக்கிய கொடூரமான குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்துப் போராடி அதனை ஒழித்ததில் தேவரின் பங்கு ஈடுஇணையற்றது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆலயப் பிரவேசப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றதோடு, தமக்குச் சொந்தமான நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்தளித்த பெருந்தன்மை கொண்டவர். தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க தொழிற்சங்கத் தலைவராகவும் நின்று களம் கண்டவர்” எனப் புகழாரம் சூட்டினார்.

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பை சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் விடுதலைக்காகவும், சமூக நீதி மற்றும் மக்கள் ஒற்றுமைக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்த காரணத்தினால்தான், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தமிழகத்தின் அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளாலும் ஒருமித்து போற்றப்படும் மாபெரும் மக்கள் தலைவராக விளங்குகிறார் என்று தெரிவித்தார். முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் தேவர் திருமகனாரின் பிறந்தநாளை முன்னிட்டு பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி புகழஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. அத்தகைய வரலாற்று நாயகனின் தியாகங்களை இளைய தலைமுறையினர் போற்றிப் பின்பற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary: PMK president Dr. Anbumani Ramadoss paid tribute to Pasumpon Muthuramalinga Thevar on his 119th birth anniversary and 64th Guru Pooja. In a statement, he recalled Thevar’s support for Netaji Subhas Chandra Bose, his role in mobilising recruits for the Indian National Army, his fight against the Criminal Tribes Act, and his support for the Madurai Meenakshi temple entry movement and for workers’ rights. He said Thevar is honoured by all national and state parties in Tamil Nadu and urged the younger generation to follow his example.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன