தமிழ்நாடு

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை: அதிமுக சார்பில் ஜெயலலிதா அளித்த தங்கக் கவசம் சாற்றி அஞ்சலி!

பசும்பொன்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு வருகை தந்த அவர், தேவர் திருக்கோவிலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அதிமுக சார்பில் பசும்பொன் தேவர் சிலைக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 13.5 கிலோ எடை கொண்ட தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தேவர் சிலைக்கு மலர் தூவி பக்தியுடன் வணங்கினார். தேவரின் தியாகத்தையும் நாட்டுப்பற்றையும் நினைவு கூர்ந்து அவர் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “தேசப்பற்றையும் தெய்வீகத்தையும் வாழ்வின் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தியாகமும் நேர்மையும் அவரது வாழ்வியல் நெறிகளாக விளங்கின. ‘மனிதனை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் அடிப்படையில் மதிக்க வேண்டுமே தவிர, வேறு எந்த அடிப்படையிலும் அல்ல’ என்ற தேவர் திருமகனாரின் உயரிய சிந்தனை என்றும் மனிதகுலத்திற்கு நல்வழிகாட்டும்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

English summary: AIADMK general secretary Edappadi K. Palaniswami paid tribute at the memorial of Pasumpon Muthuramalinga Thevar at Pasumpon in Ramanathapuram district on his birth anniversary and Guru Pooja, after garlanding the Marudhu brothers’ statue in Madurai. The Thevar statue wore the 13.5 kg gold armour that the late Chief Minister Jayalalithaa had presented on behalf of the AIADMK in 2014. In a social media post, Palaniswami praised Thevar’s patriotism, sacrifice and integrity.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன