தென்கிழக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது – வானிலை மையம் தகவல்
சென்னை, அக்டோபர் 31: தென்கிழக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்றும், இது அடுத்த இரண்டு நாட்களில் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர தமிழ்நாட்டின் சில இடங்களிலும் மற்றும் சென்னை நகரின் சில பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி அன்று வெளியான செய்திகளின்படி, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் சுற்று வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
English summary: The weather office said a low-pressure area over the southeast Andaman Sea has strengthened into a depression that will move towards the Andhra coast over the next two days. Light rain is likely today in Thoothukudi, Tirunelveli, parts of coastal Tamil Nadu and Chennai, moderate rain tomorrow in Madurai, Tiruchi, Namakkal, Salem, Erode and Karur, and heavy rain in the Nilgiris the day after.