வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது
புதுச்சேரி, அக்டோபர் 28: வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் சுற்று வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி அன்று வெளியான செய்திகளின்படி, வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக மாறியது. இது தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்ததாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.