உப்பளம் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் நேரு
புதுச்சேரி, அக்டோபர் 30: புதுவையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையைக் கண்டித்து, சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் உப்பளம் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
புதுவையில் கடந்த சில தினங்களாக முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் நகரப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெங்கட்ட நகர் துணைமின் நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்புகள் மிகவும் பழமையாக உள்ளதால், தற்போதைய புதுவையின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. வளர்ந்து வரும் புதுவைக்கு ஏற்ப மின் கட்டமைப்புகளை மேம்படுத்த வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்தின் போது, மின்துறை அதிகாரிகளைக் கண்டித்தும் பொதுமக்கள் படும் அவதிகளை விளக்கியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து மின்துறை தலைமை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர் நேருவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்துறையில் நிலவும் உட்கட்டமைப்பு பிரச்சனைகள் குறித்து முதலமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சரிடம் பேசி மின்தடைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
English summary: A protest led by MLA Nehru laid siege to the electricity department head office at Uppalam, Puducherry, against frequent power cuts. The article says the Venkata Nagar substation’s equipment is very old and cannot meet current demand. Senior officials held talks with him and promised to take up the infrastructure issues with the Chief Minister and the electricity minister for a permanent solution, after which the protest was withdrawn.