புதுச்சேரி

தேர்தல் ஆணையம், SIR விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க பாஜக திட்டம்: அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் ஆலோசனை!

புதுச்சேரி: தேர்தல் ஆணையம் மற்றும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பரப்பி வரும் தவறான பிரச்சாரங்களை மக்களிடம் உண்மைத் தகவல்களைக் கொண்டு முறியடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வி.பி. ராமலிங்கம் மற்றும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அவதூறுகளைப் பரப்பி வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மையான நிலவரங்களை பொதுமக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்பதற்கான வியூகங்கள் விரிவாக வகுக்கப்பட்டன.

மேலும், வரும் 23-ஆம் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. பூத் அளவிலும் தொகுதி அளவிலும் பொதுமக்களைச் சந்தித்து, ஜனநாயகக் கடமையான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்யும் நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மையை எடுத்துரைக்க விரிவான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் நிரவி–திருப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், காரைக்கால் நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜகவின் மாநில, மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர். முன்னதாக, பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், வெளிப்படையான தேர்தல் நடைமுறைகளை உறுதிப்படுத்தவும் கட்சியினர் களத்தில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன