புதுச்சேரி

பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா: லாஸ்பேட்டையில் பிரம்மாண்ட ‘மனித ரங்கோலி’ – பாஜக தலைவர்கள் நேரில் ஆய்வு!

புதுச்சேரி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் மற்றும் அவரது 25 ஆண்டுகால மக்கள் சேவையை போற்றும் வகையில், புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரம்மாண்ட ‘மனித ரங்கோலி’ (Human Rangoli) நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான முன்னேற்பாட்டுப் பணிகளை பாஜக முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பொதுவாழ்வு மற்றும் மக்கள் நலப் பணிகளை நினைவுகூரும் வகையில் புதுச்சேரி மண்ணில் வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டங்களுக்கு மாநில பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக லாஸ்பேட்டையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பிரம்மாண்ட ‘மனித ரங்கோலி’ சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கான களப்பணிகள் மற்றும் மைதான முன்னேற்பாடுகளை பாஜக முக்கிய பிரமுகர் வி.பி.ராமலிங்கம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் (ராஜ்யசபா எம்பி) சு.செல்வகணபதி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அணிப் பொறுப்பாளர்கள் உடனிருந்து மைதானத்தின் பாதுகாப்பு, வடிவமைப்பு மற்றும் மேடை அமைக்கும் பணிகளை விரிவாகக் கேட்டறிந்தனர்.

பிரதமரின் 25 ஆண்டுகால ஆட்சி மற்றும் மக்கள் சேவை சாதனைகளை சித்தரிக்கும் வகையில் இந்த மனித ரங்கோலி அமையவுள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்ளும் வகையில் ஒருங்கிணைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி பாஜக வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக அமையும் என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

English summary: The Puducherry BJP is planning a large human rangoli at the Swami Vivekananda Government Higher Secondary School ground in Lawspet to mark Prime Minister Narendra Modi’s birthday and his 25 years of public service. BJP leader V.P. Ramalingam inspected the arrangements along with Rajya Sabha member S. Selvaganapathy and other office-bearers. Students, youth and the public are expected to take part, and organisers called it a milestone event.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன