காரைக்காலில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்: அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் அஞ்சலி!
காரைக்கால்:
முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்குப் புதுச்சேரி மாநில அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காகத் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திரா காந்தியின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி விளையாட்டுத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எம்.ஹெச். நாஜிம் ஆகியோர் கலந்துகொண்டு, அலங்கரிக்கப்பட்ட இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய சீரிய பணிகள் மற்றும் அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளைத் தலைவர்கள் நினைவு கூர்ந்தனர். மேலும், அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் அங்குத் திரண்டிருந்த அனைவரும் மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவில் மாவட்ட அளவிலான அரசு துறைசார்ந்த உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்போம் என இந்நாளில் உறுதியேற்றனர்.


