தட்டாஞ்சாவடியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க தகுதியுடைய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் 725 கோடி ரூபாய் முதலீட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க உழவர்கரை நகராட்சி டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய வணிக அமைச்சகத்தின் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒப்புதல் வாரியம் தட்டாஞ்சாவடியில் 8.62 ஹெக்டர் பரப்பளவில் பொருளாதார மண்டலத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அதிநவீன ஐடி பூங்காவின் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த 3,500 இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகராட்சிக்கு கூடுதல் நிதிச்சுமை மற்றும் பெருமளவு மூலதன செலவு ஏற்படாத வகையில் இணை மேம்பாட்டாளர் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அவசியமான உட்கட்டமைப்புகளுடன் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட உள்ளது. ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் திட்டப்பணிகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதியுடைய நிறுவனங்கள் இதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 26ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதள வழியில் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்பான நகராட்சி நேரடியாக சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary: The Uzhavarkarai municipality has issued a tender notice to set up a special economic zone at Thattanchavady, Puducherry, with an investment of Rs 725 crore. The Union Commerce Ministry’s SEZ approval board has approved it over 8.62 hectares, and the IT park is expected to create direct and indirect jobs for 3,500 local youth. A co-developer will be selected, eligible firms must apply online by the 26th of next month, and works must be completed within three years of the approval letter.