புதுவையில் மேலும் 2000 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற இளநிலை எழுத்தர்களுக்கு பணையாணை வழங்கும் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கி உரையாற்றினார்.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம் என்று அவர் தெரிவித்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் சுகாதாரம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 5,000 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அனைவருக்கும் அரசு வேலை வழங்குவது சாத்தியமில்லை என்பதால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சேதராப்பட்டு மற்றும் கரசூரில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும், இன்னும் சில ஆண்டுகளில் அரசு துறைகளில் காலியாக உள்ள 2,000 பணியிடங்கள் நேர்மையான முறையில் நிரப்பப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.